மணிப்பூர் விவகாரம் நாட்டை உலுக்கி வரும் நிலையில், நாடாளுமன்றத்தையே புரட்டி போட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தில் கடந்த 5 நாள்களாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்கெட்ச் போட்ட எதிர்க்கட்சிகள்:


நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் இன்று தாக்கல் செய்தன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக 2023ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டே கணித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரதமர் மோடி:


கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 7ஆம் தேதி, பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர், ஓராண்டுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது, "எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். 2023இல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு  தயாராகுங்கள்" என்றார்.


இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய அவர், "இரண்டு எம்பிக்கள் (பாஜக சந்தித்த முதல் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது) செய்த சேவை நாம் இங்கு அதிகாரத்தில் இருக்கிறோம். அகங்காரம் காரணமாக 400 எம்பிக்கள் கொண்ட நீங்கள் தற்போது 40ஆக குறைந்துள்ளீர்கள். இப்போது, எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என நீங்களே பார்த்து கொள்ளுங்கள் 


பிரதமர், இந்த கருத்தை தெரிவிக்கும் போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி உள்பட பல கட்சி தலைவர்கள், நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர். 2018 ஆம் ஆண்டில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் பல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசாங்கம் வெற்றி பெற்றது.


இந்த முறை, மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா (எதிர்க்கட்சி) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அசூர பலத்தில் உள்ள மத்திய பாஜக அரசு, அதை தோற்கடிப்பது  உறுதி. இருப்பினும், மணிப்பூர் தொடர்பாக பிரதமரை பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.


தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சார்பில் தனியாக வேறொரு நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.