ஆகஸ்ட் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல்வேறு முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
பாங்க் ஆஃப் பரோடாவில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்:
முதலில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் காசோலை தொடர்பாக முக்கிய விதிகள் மாற்றப்பட உள்ளது. அதாவது பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ரூ 5 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக காசோலை செலுத்த வேண்டும் என்றால் அதற்கு நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஒருவர் அதிக தொகை கொண்ட காசோலைகளை வங்கியில் அளிக்கும் முன் வங்கியில் நேரடியாக தகவல் வழங்க வேண்டும். பண மோசடி மற்றும் தவறான பணப்பரிவர்த்தனையை தடுக்க இந்த நடவடிக்கை பாங்க் ஆஃப் பரோடா கொண்டுவந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை:
அதேபோல் ஆக்ஸ்ட் மாதம் பல பண்டிகைகள் நாடு முழுவது கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவது வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி பார்சி புத்தாண்டை முன்னிட்டு மகாராஷ்டிராவில் வங்கிகள் செயல்படாது. தமிழ்நாட்டில் மொஹரம், ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதுமட்டுமின்றி இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது.
சிலிண்டர் விலையில் மாற்றம்:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யப்படும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து வருகிறது.
வருமான வரி தாக்கல்:
வருமான வரி தாக்கலுக்கு ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாள். ஆகஸ்ட் மாதம் வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 5 ஆயிரம் அபராதமும், ரூ. 5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.