பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.


அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகியது. இது 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது , திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இளநீர் விற்கும் தாயம்மாள், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கியதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 


அதுமட்டுமின்றி, பள்ளியின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பிரச்னைகளைப் தீர்க்க முனைந்தபோது நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த சமயத்தில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தில் தாயம்மாள் கலந்துகொண்டதையும் மன் கி பாத் உரை கேட்டவர்களுக்கு நினைவுகூர்ந்தார்.


அந்த நிகழ்ச்சியில் தாயம்மாள் குறித்து பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. 




பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை” என்றார்.


மேலும் பேசிய அவர், “நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்கமுடியும். ஜன., 30 தேதியானது மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மகாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். 




போர் நினைவிடத்தில், சுதந்திரம் பெற்றதிலிருந்து வீரமரணம் அடைந்த நாட்டின் அனைத்து வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். முன்னார் ராணுவ வீரர்கள் சிலர் அமர்ஜவான் ஜோதி குறித்து கடிதம் எழுதி உள்ளனர்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண