உலகின் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக கருதப்படுவது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம். உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கள் நாடுகளை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளன. ஏஐ தொழில்நுட்ப உச்சி மாநாடு:
இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்ப உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இதில் உலகின் 100 முன்னணி நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பல்வேறு விவகாரங்களை மோடி பேசினார்.
அப்போது, அவர் சாதாரண விஷயத்தில் ஏஐ தொழில்நுட்பம் செய்யும் மிகப்பெரிய தவறை சுட்டிக்காட்டினார். அதாவது, ஏஐ தொழில்நுட்பத்திடம் நீங்கள் இடது கையில் யாராவது எழுதுவது போல புகைப்படம் கேட்டால், ஏஐ தொழில்நுட்பம் வலது கையால் ஒருவர் எழுதுவது போன்ற புகைப்படத்தையே பெரும்பாலும் தருகிறது என்றார். மோடி கூறிய இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இணையத்தில் இந்த விவகாரமே ட்ரெண்டாகி வருகிறது. மோடி கூறியதை பலரும் இணையத்தில் தேடி சரிபார்த்து வருகின்றனர். அப்படி சரிபார்க்கும்போது பிரதமர் மோடி கூறியது மிகச்சரி என்று தெரியவந்துள்ளது. ஏஐ என்ன தருகிறது?
இணையவாசிகள் பலரும் தாங்கள் மோடி கூறியதுபோல ஏஐ தொழில்நுட்பத்திடம் இடது கையில் படம் வரைபவர்களை கேட்டால் ஏஐ தொழில்நுட்பம் வலது கையில் படம் வரைபவர்களை காட்டுகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு பயனாளி ஏஐ தொழில்நுட்பத்திடம் இந்த கேள்வியை கேட்டால் அது அளிக்கும் பதிலை அப்படியே விளக்கமாக வீடியோவாக அளித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் எந்தளவு மனித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மனிதனின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஏஐ-யின் சில செயல்பாடுகளும் அதேபோல அமைந்தது. அதனால், ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.