Gaganyaan ISRO: இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள முதல் உயிரினத்தை சுமந்து செல்ல ககன்யான் விண்கலம் தயாராகி வருகிறது.


விண்வெளி ஆராய்ச்சி:


விண்வெளி உலகம் மர்மங்களால் நிறைந்துள்ளது. இந்த மர்மங்களைத் தீர்க்கவும், புதிதாக ஒன்றைக் கண்டறியவும், விஞ்ஞானிகள் பல புதிய பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர். இந்தப் பரிசோதனைகளில் ஒரு உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்புவதும் அடங்கும். அதன்படி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதற்கான முன்னோட்டமாக, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகின்றனர். இந்த பணி ககன்யான் -1 இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.



ஈக்கள் ஏன்?


இந்த திட்டத்தின் படி, இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் உயிரினம் பழ ஈக்கள் தான்.  இப்போது ஏன் ஈக்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இதுதொடர்பான தகவல்களின்படி, இஈக்களின் 75 சதவீத மரபணுக்கள் மனிதர்களுக்கு நோய்களை உண்டாக்கும் வகையில் உள்ளன. அவற்றின் வெளியேற்ற அமைப்பும் பெரும்பாலும் மனிதர்களைப் போலவே உள்ளது. இந்த நேரத்தில், இந்த ஈக்கள் சிறுநீரக கற்கள் அல்லது விண்வெளியில் வேறு ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள இது உதவும் என்பதை விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.


எப்படி வேலை செய்யும்?


இதுதொடர்பாக பேசும் ஆராய்ச்சியாளர்கள், ”SIRT1 மரபணுவின் அளவை மாற்றுவதன் மூலம் விண்வெளி பயணத்தின் பக்க விளைவுகளை குறைக்க முடியுமா என்பதை ஆராய்வோம். இதன் மூலம், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை மேம்படுத்த முடியும்” என தெரிவிக்கின்றனர்.  விஞ்ஞானிகள் ஈக்களை பல பாட்டில்களில் வைத்து விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர். அவை இரண்டு குழுக்களாகப் பிரிக்க முடியும்.  ஒரு குழு விண்வெளிக்குச் செல்லும், மற்றொரு குழு பூமியில் இருக்கும். இந்த நேரத்தில், விண்வெளியில் ஈக்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், இரு குழுக்களுக்கும் இடையிலான உடல் மற்றும் மரபணு மாற்றங்கள் ஆய்வு செய்யப்படும். 


விண்வெளியின் மர்மத்தை தீர்க்குமா?


இந்த ஈக்களில் உள்ள SIRT1 மரபணுவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். இது உடலின் வயதான செயல்முறை, வளர்சிதை மாற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், விஞ்ஞானிகளுக்கு ஒரு சவால் என்னவென்றால், ஈக்களின் ஆயுட்காலம் 5 முதல் 60 நாட்கள் வரை ஆகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த பணியை இந்தக் காலத்திற்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் தீர்வுகளால், ககன்யான் போன்ற சிறிய பயணங்களில் உயிரியல் விளைவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது.


சோதனை முயற்சியான இந்த ககன்யான் - 1 விண்கலம், விரைவில் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இது போன்ற முன்னோட்டங்கள் மூலம் கிடைக்கும் தரவுகளின் மூலம், மனிதர்கள் பயணிக்க உள்ள ககன்யான் - 4 விண்கலம் எந்தவித குறையும் இன்றி கட்டமைக்கப்பட உள்ளது. அதன்மூலம், 2027ம் ஆண்டிற்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், இஸ்ரோவின் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை விண்வெளிக்கு சென்ற மனிதன் அல்லாத உயிரினங்கள்:



  • பழ ஈக்கள், அமெரிக்கா - பிப்.20, 1947

  • நாய் (லைகா), சோவியத் யூனியன் - நவ.3, 1957

  • ஆமைகள், சோவியத் யூனியன், 1968

  • காளைத் தவளைகள், அமெரிக்கா - 1970

  • எலிகள் - நாசா அமைப்பை உருவாக்குவதற்கு முன்பே எலிகளை அமெரிக்க விண்வெளிக்கு அனுப்பியது

  • மீன்கள் - நுண் ஈர்ப்பு விசை மீன்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அவை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன