குழந்தையை கவனித்து கொள்ள பெண்களுக்கும், மனைவி இல்லாத ஆண்களுக்கும் 730 நாட்கள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இந்தியாவை பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 26 வாரங்களுக்கு (6 மாதங்கள்) மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. முதல் குழந்தை பெற்ற பின்பும், இரண்டாவது குழந்தை பெற்ற பின்பும் 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம்.


மகப்பேறு விடுமுறை:


அதற்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு 12 வாரங்கள் ( மூன்று மாதங்கள்) வரையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம். பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்த வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.


மகப்பேறு விடுமுறையை தவிர்த்து, அதற்கு பிறகும் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு என அரசு பணியாளர்களுக்கு தனியாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பெண்கள் மட்டும் அல்லாமல், மனைவி இல்லாத ஆண்களும் எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


குழந்தைகளை கவனித்து கொள்வதற்கென சிறப்பு விடுப்பு: 


இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், "குழந்தைகளை கவனித்து கொள்வதற்கான 730 நாள்கள் விடுப்பை பெற பெண் அரசு ஊழியர்களும் மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களும் தகுதி பெற்றவர்.
மத்திய சிவில் சேவை (விடுப்பு) விதிகள், 1972, 43-சி விதியின் கீழ் பணியில் இருக்கும் ஒட்டு மொத்த காலத்திற்கு 730 நாள்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.


பெற்று கொள்ளும் முதல் இரண்டு குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை இந்த விடுப்பு பொருந்தும். அதேபோல, மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்று கொள்ளவும் இந்த விதி பொருந்தும். ஆனால், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என எந்த வயது வரம்பும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குழந்தைகள் பிறந்து அல்லது தத்தெடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், ஆண்களுக்கு என 15 நாள்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில், தாய்மார்களின் சுமையை குறைக்க ஆண்களுக்கான மகப்பேறு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெண்கள் குழு கோரிக்கை விடுத்தது.


சமீபத்தில்தான், அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு மகப்பேரு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும் ஆண்களுக்கு 1 மாதமாக உயர்த்தப்படும் என்றும் சிக்கிம் அரசு அறிவித்தது. இதுகுறித்து சிக்கம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், "அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள இந்த விடுப்பு உதவும்" என்றார்.


மற்ற நாடுகளில் எப்படி?



  • ஸ்பெயினில் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறையாக 16 வாரங்கள் அளிக்கப்படுகிறது.

  • சுவீடன் நாட்டில் ஆண்களுக்கு 3 மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

  • பின்லாந்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கு 164 நாள்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

  • அமெரிக்காவில் ஆண்களுக்கான மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.