இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 62.37 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.


பொதுக்கூட்ட மேடையை தெறிக்கவிட்ட INDIA கூட்டணி:


தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள் என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர், நக்சல் தாக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. 


கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற இந்தியா கூட்டணியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 


அதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மேடையில் காலியாக விடப்பட்ட இரண்டு இருக்கைகள்:


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்காக பொதுக்கூட்ட மேடையில் இரண்டு இருக்கைகள் காலியாக விடப்பட்டிருந்தன. அதே மேடையில், கைதான இரண்டு முதலமைச்சர்களின் மனைவி அமர்ந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பொதுக்கூட்டத்தில் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டனர்.


இவர்களை தவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஷிபு சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் ராஞ்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


சோரனின் கைதை கண்டிக்கும் விதமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்கள், சோரன் படம் பதிந்த மாஸ்கை அணிந்திருந்தனர். அதுமட்டும் இன்றி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சோரனுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.


"ஜெயில் பூட்டு உடைக்கப்படும், ஹேமந்த் சோரன் விடுவிக்கப்படுவார்" என்றும் "ஜார்கண்ட் அடிபணியாது" என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ராஞ்சியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.


இதையும் படிக்க: Rahul Gandhi: அச்சச்சோ! ராகுல் காந்திக்கு உடம்பு சரியில்லையா? அப்டேட் சொன்ன காங்கிரஸ்!