அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.
ஐந்து மாநில தேர்தல்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது.
சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சத்தீஸ்கரின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நடத்தப்படுகிறது. சத்தீஸ்கருடன் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 18,800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 தொகுதிகளில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தும்படி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, "ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவைக் கொண்டாட மாநிலத்தின் (மத்தியப் பிரதேசம்) ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தல் நாளில் மெசேஜ் சொன்ன பிரதமர் மோடி:
சத்தீஸ்கர் சட்டப்பேரவை இன்று இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது ஜனநாயக மரபுகள் மற்றும் நடைமுறைகளை நிலைநிறுத்த உங்கள் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாததாகும்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும். பிந்த்ரனவகர் சட்டமன்றத் தொகுதியின் ஒன்பது வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இதற்கிடையில், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாலகாட் மாவட்டத்தின் பைஹார், லாஞ்சி மற்றும் பர்ஸ்வாரா சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மாண்ட்லா மற்றும் திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
சுமார் 42,000 வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, 700 மத்தியப் பாதுகாப்பு படைகளும், 2 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.59 கோடி பேர், வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அதில், 2.87 ஆண்களும் 2.71 பெண்களும் அடங்குவர்.