அதிர்ஷ்டம் இருந்தால் ஏழைக்கூட பணக்காரன் ஆவான், இல்லை என்றால் கோட்டையில் இருப்பவன்கூட தெருக்கோடிக்கு வரலாம். அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என பல பலமொழிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிர்ஷ்டம் வந்துவிட்டால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் கூட நடக்கலாம்.


வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் தவறாக விழுந்த பணம்:


அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது நடந்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பணம் தவறாக டெபாசிட் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவருது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆன சம்பவம மக்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. பின்னர், அது தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.


இந்த நிலையில், யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கி கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த பணம், தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணத்தை திருப்பி எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹேக் செய்ய முயற்சியா?


வங்கி கணக்குகளில் தவறாக விழுந்த 820 கோடி ரூபாயில் இதுவரை, 649 கோடி ரூபாய் திருப்பி எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணம் விழுந்த வாடிக்கையாளர்களின் கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது. மனித தவறின் காரணமாக பணம் தவறாக விழுந்ததா அல்லது யாரேனும் ஹேக் செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து வங்கி விளக்கம் அளிக்கவில்லை.


உடனடி பணம் செலுத்தும் சேவையின் (IMPS) மூலம்தான் இந்த பணம் மாற்றப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சேவை வருகிறது. நிகழ்நேரத்தில் எந்த வித தலையீடும் இன்றி, நேரடியாக நடக்கும் பண பரிமாற்றமே IMPS என அழைக்கப்படுகிறது.


இதுகுறித்து வங்கி தரப்பு அளித்த விளக்கத்தில், "மீதமிருக்கும் 171 கோடி ரூபாயை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நவம்பர் 10 முதல் 13 வரையிலான காலகட்டத்தில், ஐஎம்பிஎஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால் தொடங்கப்பட்ட சில பரிவர்த்தனைகள், யூகோ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணமாக வந்து சேர்ந்துள்ளது. 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது யூசிஓ வங்கி.


கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த வங்கியின் நிகர லாபம் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.