நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


அசாத்திய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சந்திரயான் 3:


நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.


அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.


சந்திரயான் 3 லேண்டர் புகைப்படத்தை எடுத்து அசத்திய சந்திரயான் 2:


இந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட DFSAR கருவி, சந்திரயான் 3 லேண்டர் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) மூலம் கடந்த 6ஆம் தேதி, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூலை 22 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது. அதில், லேண்டரை தரையிறக்கும் போது கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் அது நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. லேண்டர் நொறுங்கினாலும், சந்திரயான் 2 விண்கலத்தின் மற்ற கருவிகள் அனைத்துமே, ஆராய்ச்சியை தொடர்ந்து வண்ணம் உள்ளது. அதில் முக்கியமானது ஆர்பிட்டர்.




சந்திரயான்-2 ஆர்பிட்டரைக் கொண்டு, அதிலிருந்த கருவிகள் மூலம் இஸ்ரோ கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வுகளைத் தொடர்ந்தே வந்தது. அதில் உள்ள தொலையுணர் கருவிகள், ப்ளாஸ்மா அளவீட்டுக் கருவிகள் போன்றவற்றைக் கொண்டு பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அது தரவுகளை அனுப்பி வருகிறது.


 




இந்த சூழலில்தான், சந்திரயான் 3 லேண்டரின் புகைப்படத்தை சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட DFSAR கருவி எடுத்து அனுப்பியுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் விக்ரம் லேண்டர் ஏற்கனவே தொடர்பை ஏற்படுத்தி கொண்டது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்ததால், சந்திரயான் 3 விண்கலத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.