பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் 4 நாள் அமெரிக்கா மற்றும் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் நாடு திரும்பினார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் 5 புதிய வழிதடங்களில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.






இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.


டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதுபோன்று நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 


இன்று காலை 10.30 மணியளவில் ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது.


மக்களின் பயன்பாட்டிற்காக அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நாட்டின் 18வது வந்தே பாரத் ரயில் சேவையாக அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேரள மாநிலத்திலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஒருபுறம் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டாலும் வந்தே பாரத் ரயில் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.