தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான்.


தென்மேற்கு பருவ மழை: 


இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ நிகழ்வு இருக்கும் என்பதால் மழையின் அளவு சராசரி அளவை விட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சூழலில் ஜூன் 8 ஆம் தேதி பருவ மழை தொடங்கியது. வழக்கமாக ஜூன 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியது. கேரளாவில் தான் தென்மேற்கு பருவ மழை தொடங்கும், இந்த பருவமழை தொடங்கியதுமே அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது.


கேரளாவில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் மழை கொடுப்பது தென்மேற்கு பருவமழை தான். பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலம் ஜக்காவு தீவு அருகே கரையை கடந்தது. இதனால் பருவமழை தொடங்கும் முன்னே குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கேரளா மற்றும் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது அதாவது 80% பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


62 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆச்சரியம்: 


அதே சமயம் 62 ஆண்டுகளுக்கு பின் மும்பை மற்றும் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு வாரங்கள் இடைவெளிக்கு பின் தான் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மும்பையில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகவும், டெல்லியில் இரண்டு நாள் முன்னதாகவும் பருவமழை தொடங்கியுள்ளது. ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் வரும் நாட்களில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


குறைவாக பதிவான பருவமழை:


இதனிடையே இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 23% குறைவாகவே பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 70 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 60 சதவீதம் பருவமழை பற்றாக்குறை உள்ளது என்றும், தென்னிந்தியாவில் 58 சதவீதம் பருவமழை பற்றாக்குறை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.