நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதி நடக்க உள்ளது. மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


"வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார்"


இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மற்றும் ஹிங்கோலி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.


ராகுல் காந்தியை குறிப்பிட்ட பேசிய பிரதமர், "அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார். அதனால் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குப் பிறகு பாதுகாப்பான தொகுதியை தேட வேண்டியிருக்கும்" என்றார். சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர், இந்திய கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் மக்களவையை விட்டு வெளியேறி மாநிலங்களவைக்கு செல்கின்றனர்.


முதல்முறையாக, காங்கிரஸ் வேட்பாளருக்கு தொகுதி மக்கள் வாக்களிக்க போவதில்லை. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளரே இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்னும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.


"இந்தியா கூட்டணிக்கு முகம் இல்லை"


விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையாக இருந்து வருகிறது. வேளாண் நெருக்கடி இப்போது நடப்பதில்லை. காங்கிரஸின் தவறான கொள்கைகளால் இது நடந்தது" என்றார்.

 

இந்தியா கூட்டணி தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி, "அந்த கூட்டணிக்கு முகம் என யாரும் இல்லை. நாட்டின் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம்.

 

தங்கள் ஊழல் நடவடிக்கைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகளின் கூட்டமே எதிர்க்கட்சி கூட்டணி. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வாக்காளர்கள் அதிக அளவில் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

நீங்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த நன்மையும் செய்யவில்லை. நீங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கிறீர்கள். எதிர்க்கட்சியில் இருந்துவரும் கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்த விரும்புகிறேன்.

 

நீங்கள் (எதிர்க்கட்சித் தலைவர்கள்) தேர்தலில் தோல்வியடைவது உறுதி. இருந்தாலும், உங்களுக்கு என ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும். வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு நீங்களும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். (தேர்தல் முடிவுகள்) ஜூன் 4-க்குப் பிறகு, அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வார்கள்" என்றார்.