தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த பிப்ரவரி மாதம், உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட்டது.


சர்ச்சையை கிளப்பும் தேர்தல் பத்திரம்:


அதன்படி, யார் எல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், எந்த அரசியல் கட்சிகள் எல்லாம் நன்கொடை பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.


தேர்தல் பத்திரங்கள் மூலம் சென்ற பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு கிடைத்தது தெரிய வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 6000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்தது.


தேர்தல் நேரத்தில் தேர்தல் பத்திர விவகாரம் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் தேர்தல் பத்திரத்தை கொண்டு வருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


புயலை கிளப்பும் நிர்மலா சீதாராமன்:


தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தேர்தல் பத்திரம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "தேர்தல் பத்திரங்கள், வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தது. இதற்கு முன்பு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் விதிகளே இல்லை. 


சம்பந்தப்பட்டவர்களிடம் நாங்கள் இன்னும் நிறைய ஆலோசனை செய்ய வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க அல்லது கொண்டு வர, முதன்மையாக வெளிப்படைத்தன்மையின் அளவைத் தக்கவைத்து, இங்கிருந்து கருப்புப் பணத்தை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.


வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், ஏதாவது ஒரு வடிவத்தில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை  மத்திய அரசு மறுசீராய்வு செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.


முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதேபோன்ற கருத்தைதான் தெரிவித்திருந்தார். தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "நாங்கள் இது தொடர்பாக மசோதாவை கொண்டு வருவோம் என்று கூறவில்லை.


ஆனால், அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை பணமாக இருப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும். அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிப்போம் என்று 2014ஆம் ஆண்டு முதல் பாஜகவும், நரேந்திர மோடியும் உறுதி அளித்திருந்தனர்.


தேர்தல் பத்திரங்கள் இல்லாததால் நன்கொடை பணமாக செல்வது அதிகரிக்கும். இதனால், அரசியல் நன்கொடைகளுக்கு தேர்தல் பத்திரங்கள் ஒரு நல்ல வழி என்பதை மக்கள் உணர்வார்கள்" என்றார்.