மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டல், நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இது மராத்தி அல்லது மகாராஷ்டிராவுக்கான கௌரவம் மட்டுமல்ல. அறிவு, தத்துவம், ஆன்மீகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் வளமான கலாச்சாரத்தை நாட்டிற்கு வழங்கிய பாரம்பரியத்திற்கு இது ஒரு மரியாதை. இதற்காக பாரதத்திலும், உலகெங்கிலும் உள்ள மராத்தி பேசும் அனைத்து மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.


இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘வளர்ந்த இந்தியா’  என்ற ஒரே குறிக்கோள்தான் உள்ளது. அதனால்தான் எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு உறுதிமொழியும், ஒவ்வொரு கனவும் 'வளர்ந்த பாரதத்திற்கு' அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


இந்த இலக்கை அடைய, மும்பை மற்றும் தானே போன்ற நகரங்களை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும். இருப்பினும், முந்தைய காங்கிரஸ் அரசுகள் விட்டுச் சென்ற இடைவெளிகளை நிரப்பும் அதே வேளையில், நாம் வேகமாக வளர வேண்டும் என்பதால் நாம் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டும். 


இன்று, மும்பை பெருநகரப் பகுதியில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மரைன் டிரைவிலிருந்து பாந்த்ரா வரையிலான பயணம் இப்போது கடலோர சாலை வழியாக 12 நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அடல் சேது, தெற்கு மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான தூரத்தைக் குறைத்துள்ளது. 


காங்கிரஸ் எங்கு காலடி எடுத்து வைத்தாலும், அது அழிவுக்கே வழிவகுக்கிறது. நாட்டை வறுமையில் தள்ளிவிட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவை அழித்தார்கள். அவர்கள் மகாராஷ்டிராவின் விவசாயிகளை அழித்தார்கள்.


எங்கெல்லாம் ஆட்சி அமைத்தார்களோ, அங்கெல்லாம் அந்த மாநிலத்தையும் அழித்து விட்டார்கள். அது மாத்திரமல்ல அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் அழிந்து போகின்றன. ஒரு காலத்தில் தேசியவாதம் பற்றி பேசியவர்கள் இப்போது திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.


நாம் அனைவரும் இணைந்து மகாராஷ்டிராவின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், மேற்கொள்ளப்பட்டு வரும் ஏராளமான பணிகளுக்காகவும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.


காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கரை இழிவுபடுத்துகிறார்கள். தவறாகப் பேசுகிறார்கள். ஆனாலும், காங்கிரஸின் ஆதரவாளர்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்கிறார்கள்" என்றார்.