கடந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

காஷ்மீரில், ஹரியானாவில் கோலோச்சும் காங்கிரஸ்:


கடந்த மக்களவைத் தேர்தலில் சரிவைச் சந்தித்த பா.ஜ.க., அடுத்தடுத்து சறுக்கல்களைச் சந்திதத்து வரும் சூழலில், காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


நீண்ட வருடங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறாமல் இருந்த ஜம்மு காஷ்மீருக்கும், ஹரியானாவிற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஹரியானாவில் நேற்று ஒரே கட்டமாக 90 தொகுதிளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது.

பா.ஜ.க.விற்கு பின்னடைவு:


அதில், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வை வீழ்த்தி 54 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்றும்,  காஷ்மீரிலும் 50 இடங்கள் வரை ஆட்சியை காங்கிரசே கைப்பற்றும் என்றும் ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் செல்வாக்குடன் இருந்த பல மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க.வின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவது அக்கட்சியின் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் நம்பிக்கையுடன் இருந்த உத்தரப்பிரதேசத்தில் பல தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியிடம் பறிகொடுத்தது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.


மேலும், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள நடைபெற்ற 13 தொகுதிளுக்கான சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியே 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதிகரிக்கும் காங்கிரஸ் செல்வாக்கு:


இந்த சூழ்நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று தகவல் வெளியாகி இருப்பதால் ஆட்சியில் உள்ள ஒரு மாநிலத்தை பறிகொடுக்கும் அபாயமும் பா.ஜ.க.விற்கு உண்டாகியுள்ளது.


மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் சென்று கொண்டிருப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலத்திலும் ஆட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்ற  இருப்பது காங்கிரஸ் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்திருக்கும் மகாராஷ்ட்ரா தேர்தல்:


நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ராவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வின் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மல்லுகட்டி வருகின்றனர்.


மகாராஷ்ட்ராவிலும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முதல் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் பா.ஜ.க. கூட்டணி மகாராஷ்ட்ரா தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க பல கட்டங்களாக ஆலோசனைகளை நடத்தி வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால், தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.