நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 


அதிகரிக்கும் கொரோனா


கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, சமீப காலமாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,249 ஆக இருந்த நிலையில்,  இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பானது 1,604ஆக இருந்தது. 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச பாதிப்பு இன்று பதிவாகி உள்ளது.  . 


H3N2 வைரஸ்:


கொரோனா தொற்று மட்டுமின்றி, சமீபத்தில், H3N2 வைரஸ் பெரும் அச்சத்தை கிளப்பியது.  இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சல்) ஏ வைரஸின் துணை வகையான H3N2, இந்தியாவின் இரண்டு உயிர் பலிகளை வாங்கியது. ஹரியானாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கர்நாடகாவில் உயிரிழந்தார்.


இந்த வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் நாடு முழுவதும் 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. பொதுவாக, வானிலை கடும் குளிரில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாறும்போது இம்மாதிரியான காய்ச்சல் ஏற்படும். இப்படி இருக்கும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது


அறிவுறுத்தல்


குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, கேரளா - 26/4%, மகாராஷ்டிரா-21.7%, குஜராத்-13.9%, கர்நாடகா-8.6%, தமிழகம் - 6.3% உயர்ந்துள்ளது.  இந்நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.






அதில் கூறிப்பிட்டுள்ளதாவது, ”கொரேனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு ஆகியவற்றை இருப்பதை உறுதி செய்ய  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில் தெரிவித்தள்ளது.