ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்துக்கள் மற்றும் பழங்குடியினத்தவரின் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்றும் வங்கதேச குடியேறிகளின் மக்கள் தொகை அதிகமாகி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. அதை வீழ்த்த பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, பாஜக தலைவர்கள் அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதா?
இதற்கிடையே, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் மோடி, மக்கள் பங்கேற்ற பொதுக்கட்டத்தில் பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். இந்துக்கள் மக்களை தொகை குறைந்து வருவதாகவும் வங்கதேச குடியேறிகளின் மக்கள் தொகை அதிகமாகி வருவதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அவர்கள் ஒருபோதும் ஆதிவாசிகளை முன்னேற விடவில்லை. அவர்கள் ஜார்க்கண்டில் புதிய வாக்கு வங்கியைத் தயார் செய்து வருகின்றனர். சந்தால் பர்கானாக்கள் இதற்கு ஒரு வாழும் உதாரணம்.
இங்கு ஆதிவாசிகள் தொடர்ந்து குறைந்து வருவதுடன், ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள்தொகையில் இத்தகைய விரைவான மாற்றம் ஆதிவாசிகள் மற்றும் இந்துக்களின் மக்கள்தொகையில் சரிவைக் குறிக்கிறது.
சர்ச்சை கருத்து தெரிவிக்கும் பாஜக தலைவர்கள்:
ஜார்கண்டில் இந்த மாற்றத்தை உங்களால் பார்க்க முடிகிறதா இல்லையா? வங்கதேச ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதா இல்லையா? ஜார்க்கண்டின் மகள்கள், ஆதிவாசி சமூகத்தவரின் மகள்கள் அவர்களின் இலக்குகளா இல்லையா?
இந்த அச்சுறுத்தலை நீங்கள் பார்க்கிறீர்கள். மக்கள்தொகையில் இந்த மாற்றத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், ஜார்கண்ட் அரசாங்கம் அப்படி இல்லை. ஜார்க்கண்டில் மக்கள்தொகை சமநிலை மோசமாக உள்ளது. ஆதிவாசி மக்கள் தொகை குறைந்து வருவதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை" என்றார்.
இஸ்லாமியர்கள் பற்றிய பாஜக மூத்த தலைவர்களின் மறைமுக கருத்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் தொடங்கி பா.ஜ.க.வினர் பலரும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.