ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 அக்டோபர் 3) கலந்து கொண்டார்.


நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வரும் தருணம் இது என்று கூறினார். "மாணவ உணர்வை" எப்போதும் பராமரிக்க வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.


"நற்பண்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் செயலை செய்ய வேண்டாம்"


தொடர்ச்சியான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் லட்சியங்களையும், சமூக உணர்வையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.


உணர்திறன் என்பது ஒரு இயற்கையான குணம் என்று அவர் கூறினார். சுற்றுப்புறம், கல்வி, விழுமியங்கள் ஆகிய காரணங்களால் சிலர் கண்மூடித்தனமான சுயநலத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஒருவரின் நலனை எளிதாக அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.


மாணவர்களின் நற்பண்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார். மிக உயர்ந்த தார்மீக விழமியங்கள் அவர்களின் நடத்தை மற்றும் வேலை பாணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


"அனைவரையும் உள்ளடக்கிய கல்வி"


அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நேர்மை இருக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலும் நியாயமாகவும் நெறிமுறையோடும் இருக்க வேண்டும். கல்வி என்பது அதிகாரமளித்தலுக்கான சிறந்த ஊடகம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.


மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வி வழங்கி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


அனைவரையும் உள்ளடக்கிய கல்வி சமூக நீதிக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளதுடன், கிராம வளர்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் சமூகப் பொறுப்பு குறித்த உணர்வுள்ள மனப்பாங்கினை அவர் பாராட்டினார்.