கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக, ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைப்பதற்கு வட மாநிலங்கள் முக்கிய பங்காற்றின.


குஜராத்தில் வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்:


குறிப்பாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 95 சதவகித மக்களவை தொகுதிகளை பா.ஜ.க.வே கைப்பற்றியிருந்தது. இந்த முறையும், வட மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை தொடர பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


அந்த வகையில், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 5 ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் விரைவான வளர்ச்சி காணப்படுவதற்கும் உலகம் முழுவதும் அதற்குப் பாராட்டுகள் குவிந்து வருவதற்கும் நிலையான அரசாங்கத்தை வழங்கிய பொதுமக்களே காரணம்" என தெரிவித்துள்ளார்.


"விரைவான வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது எது என மக்களுக்குத் தெரியும்"


விரிவாக பேசிய அவர், "நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு நிலையான அரசாங்கம், மாநிலத்திற்குப் பலனளிக்கும் வகையில், ஒன்றன்பின் ஒன்றாக முடிவெடுக்க உதவுகிறது. இதை குஜராத் பார்த்து வருகிறது. நான் வாக்குறுதி வழங்கினால், அதை நிறைவேற்றுவேன். நாட்டில் காணப்படும் வேகமான வளர்ச்சிக்கும், உலக அளவில் இந்தியாவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கும் (விரைவான வளர்ச்சிக்கு) ஆணிவேர், நாட்டில் நிலையான ஆட்சியைக் கொடுத்த பொது மக்கள்தான். அவர்களின் சக்திதான் காரணம்.


கடந்த பல ஆண்டுகளில் போடப்பட்ட பலமான தூண்கள், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள், துணிச்சலாக முடிவுகள் எடுக்கப்படுவதற்கும், குஜராத்தின் விரைவான வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது எது என மக்களுக்கு நன்றாகத் தெரியும்.


உங்கள் நரேந்திர மோடியை உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்னைப் பிரதமராகக் காட்டிலும் உங்கள் சொந்த நரேந்திரபாயாகப் பார்க்கிறீர்கள். உங்கள் நரேந்திரபாயை நீங்கள் அறிவீர்கள். அவர் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவார் என்பது உங்களுக்கு தெரியும்" என்றார்.


இந்தியன் ரயில்வே, குஜராத் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (GRIDE), மாநில நீர்வளம் மற்றும் நீர் வழங்கல், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி என பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.


நாளை, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.