முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. கடந்த இரு தினங்கள் முன்னதாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மக்கள், காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
"எதிர்கால தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கம்"
இந்த நிலையில், தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும்பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேவர் குருபூஜை விழா:
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சரைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டவர்கள் தேவர் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் தேவர் ஜெயந்தி முன்னிட்டு, “தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று.
சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.