மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர்.


மராத்தா  இடஒதுக்கீடு விவகாரம்:


அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 16 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் நோக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


ஆனால், மராத்த சமூகத்தவர் இடஒதுக்கீடுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீட்டை உறுதி செய்திருந்தாலும் அதன் அளவு குறைக்கப்பட்டது. வேலைவாய்ப்புகளில் 13 சதவிகிதமும் கல்வியில் 12 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, மராத்த சமூகத்தவர் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.


வெடித்த போராட்டம்:


இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மனோஜ் ஜரங்கே பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவரின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சிலர் சர்ச்சை கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததை கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது.


எம்எல்ஏ வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்:


இந்த நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டை தாக்கி, போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சோலங்கியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி சேதப்படுத்தினர். 


அஜித் பவார் ஆதரவாளரான சோலங்கி, இதுகுறித்து குறிப்பிடுகையில், "தாக்குதலுக்கு உள்ளான போது எனது வீட்டிற்குள் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக, எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், பெரிய அளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.


 






பங்களா போல் இருக்கும் எம்எல்ஏவின் வீடு கொளுந்துவிட்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.