பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, நிறைவுபெற்றுள்ளது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக, நக்சல் பாதிப்புள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்த நிலையில், சூரஜ்பூர் மாவட்டம் பிஷ்ராம்பூர் நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அவர், "காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் மன உறுதி அதிகரிக்கிறது" என்றார்.


"நக்சலைட் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது"


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "எந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அங்கே குற்றமும் கொள்ளையின் ஆட்சிதான் நிலவுகிறது. நக்சலைட் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. கடந்த சில நாட்களாக, எங்களிடம் இருந்து பாஜகவினர் பறிக்கப்பட்டுள்ளனர்.


சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நண்பர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்க்கை அழிக்கப்பட்டது. எனவே சகோதர சகோதரிகளே, நாம் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் வாழ வேண்டுமா? உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், மாலையில் உங்கள் மகன் வீடு திரும்பவில்லை, உங்கள் மகனின் சடலம் வீட்டிற்கு வந்தால், பணத்தை என்ன செய்வீர்கள்?" என்றார்.


சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய பிரதமர் மோடி, "இங்கே, சகோதரிகள் மற்றும் மகள்களை குற்றவாளிகள் குறிவைக்கின்றனர். நமது பழங்குடி குடும்பங்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். மகள்கள் எங்கே போனார்கள் என்பதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் பதில் இல்லை. 


"பழங்குடியினர் கண்ணுக்கு தெரியவில்லை"


இங்கு, சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை, ஓட்டுக்காக, காங்கிரசார் ஊக்குவிக்கின்றனர். பழங்குடியினரின் நிலம் பறிக்கப்படுகிறது. காங்கிரஸின் கொள்கையால், பண்டிகைகளைக் கொண்டாடுவது கூட கடினமாகிவிட்டது. எனது ஆட்சிக் காலத்தில் பல வேலைகள் நடந்துள்ளது. 50 முதல் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அதை செய்யத் தவறிவிட்டது.


பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், கடந்த பத்தாண்டுகளில் 80,000 பேருக்கு நிலப் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, 23,000 நில பத்திரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, காங்கிரஸுக்கு இந்தியாவின் 10 கோடி பழங்குடியினர் கண்ணுக்கு தெரியவில்லை. 


பழங்குடியினர் பகுதிகளில் 500 புதிய ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் எனது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டன. தாய்மொழியில் படித்தவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காத விதிகளை காங்கிரஸ் உருவாக்கியது. எனது குடும்பத்தினரே, பாஜக அரசு சொன்னதைச் செய்கிறது. ஒவ்வொரு ஏழைக்கும் 5,00,000 ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி வழங்கப்படும் என்று பாஜக கூறியது. 


ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவோம் என்று பாஜக கூறியது. எரிவாயு இணைப்பு கொடுப்போம், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றுவோம், முத்தலாக் சட்டத்தை இயற்றுவோம் என கூறியது. அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றி விட்டோம்" என்றார்.