பாஜகவின் கோட்டையாக கருதப்படும் சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
சத்தீஸ்கர் வாக்குப்பதிவின்போது பதற்றம்:
2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பஸ்தர், தண்டேவாடா, கான்கேர், கபீர்தம் மற்றும் ராஜ்நந்தகன் ஆகிய நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் சுக்மா மாவட்டத்தின் தொண்டமார்கா பகுதியில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் மத்திய போலீஸ் ரிசர்வ் படையின் (CRPF) வீரர் ஒருவர் காயமடைந்தார். அதை தொடர்ந்து, பந்தா கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே தேர்தல் பணியில் இருந்த மாவட்ட ரிசர்வ் காவலர் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
3 மணி வாக்குப்பதிவு நிலவரம்:
சத்தீஸ்கரில் நக்சல் வன்முறைகளுக்கு மத்தியிலும் வாக்கு தெலுத்துவதில் மக்கள் முனைப்பு காட்டியுள்ளனர். 3 மணி நிலவரப்படி அங்கு 60.92 சதவகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, வாக்குப்பதிவு நடைபெறும் மற்றொரு மாநிலமான மிசோரத்தில் 3 மணி நிலவரப்படி 69.87 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்தவரையில், காங்கிரஸ், பாஜக கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. மிசோரத்தை பொறுத்தவரையில், மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
கடந்த 1972ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மிசோரம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரமுக்கு கடந்த 1987ஆம் ஆண்டு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை, காங்கிரஸ் கட்சியும் மிசோ தேசிய முன்னணியும்தான் அம்மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படிக்க: ABP C Voter Opinion Poll: மிசோரத்தில் சர்ப்ரைஸ் கொடுக்குமா காங்கிரஸ்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?