கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகள் மெல்ல தங்களது இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை பரவி வந்த கொரோனா, டெல்டா வைரஸ்களை காட்டிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவ சுகாதார வல்லுனர்களும் தீவிரமாக எச்சரித்தனர்.




தென்னாப்பிரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு படிப்படியாக பரவிய ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இரு மடங்காகி உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் மட்டுமின்றி டெல்டா வைரசின் தாக்கமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.


இந்த நிலையில், பிரதமர் மோடி மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனையில் ஒமிக்ரான் வைரசின் பரவல், அதன் பாதிப்பு, ஒமிக்ரான் வைரசின் தீவிரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


இதுமட்டுமின்றி, ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷண், அவசியம் ஏற்பட்டால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அறிவுறுத்தியிருந்தார். மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை உறுதி செய்யுமாறும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்தனர். அந்த நெருக்கடிகளில் இருந்தே இன்னும் பலரும் மீளாத சூழலில், மீண்டும் பிரதமர் மோடி இன்று ஊரடங்கு குறித்து ஆலோசிக்க இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 129 நாடுகளுக்கு பரவியுள்ளது. டெல்டா வைரசை விட மூன்று மடங்கு அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்பதால் இந்த வைரசால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லியில் 57 நபர்களும், மகாராஷ்ட்ராவில் 54 நபர்களும், தெலுங்கானாவில் 24 பேரும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க : Today Headlines: பிரதமர் இன்று ஆலோசனை... 500 கலைஞர் உணவகங்கள்... இந்தியாவுக்கு வெண்கலம்... இன்னும் பல!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண