வங்காள தேசம் நாட்டின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் மார்ச் 26-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாட்டின் 50வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அந்த நாட்டின் சுதந்திர தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி இன்று காலை 7.45 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு சென்றார். காலை 10 மணியளவில் டாக்கா செல்லும் பிரதமர் மோடி, 10.50 மணியளவில் அந்த நாட்டின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர், மதியம் 3.45 மணியளவில் அந்த நாட்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இரு நாட்கள் சுற்றுப்பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடரபாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
15 மாதங்களுக்கு பிறகு
இந்த பயணம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கோவிட் 19-க்கு பிறகு முதன்முறையாக நமது அண்டை நாட்டிற்கு பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவிற்கு எதிராக போராடும் வங்கதேசத்திற்கு இந்தியா ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுப்பயணமும் மேற்கொள்ளாத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளிநாடு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.