ரேஞ்ச் ரோவர், லேண்ட் குரூசர் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுடன் பிரதமரின் வீட்டு கார் பார்க்கிங்கில் புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக காரும் சமீபத்தில் இணைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேபேக் கூலிங் கிளாஸ்களை அணிந்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இன்று அவரிடம் விஷேச பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் ஒன்று இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 காரில் அவர் முதல் முறையாக வந்திருந்தார். சமீபத்தில் அவருடைய இந்த புதிய காரை மீண்டும் பார்க்க முடிந்தது. தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர், நிலைமைக்கு தகுந்தவாறு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித்தான் இந்த கார் பிரதமருக்காக வங்கப்பட்டுள்ளது. இரண்டு மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார்கள் தற்போது பிரதமரின் கான்வாயில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Mercedes-Maybach S650 Guard ரக கார் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. உலகெங்கும் தயாரிக்கப்படும் கார்களில் இருப்பதிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட கார் இதுவாகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு Mercedes-Maybach S600 Guard ரக கார் இந்தியாவில் 10.5 கோடி ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. எனவே S650 Guard காரின் விலை 12 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. Mercedes-Maybach S650 Guard காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 516 பிஹெச்பி ஆற்றலையும் 900 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. அதே நேரத்தில் இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள் ஸ்டீல் கோர் புல்லட்களால் சுட்டாலும் துளைக்கமுடியாத விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.



ERV என்ற வெடிகுண்டு தாக்குதல் சோதனைக்கான சான்றிதழையும் இக்கார் பெற்றிருக்கிறது. 2 மீட்டர் தொலைவில் 15 கிலோ TNT வெடிகுண்டு தாக்குதல் நடந்தால் கூட இந்தக் காரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதே போல இந்தக் காரின் கேபினில் பிரத்யேக ஆக்சிஜன் சப்ளையும் இடம்பெற்றுள்ளது. கேஸ் தாக்குதல் ஏற்பட்டால் இக்காரின் ஆக்சிஜன் சப்ளை இதில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பை தரும். இந்தக் காரின் எரிபொருள் டேங்க் விஷேச உலோகத்தால் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் தாக்குதல்களில் ஏற்படும் நேரத்தில் ஓட்டைகள் தானாகவே சரிசெய்துகொள்ளும், அதனால் எரிபொருள் லீக் ஆகி கார் வெடிக்கும் ஆபத்துகள் எதுவும் இல்லை. AH-64 Apache tank attack ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும் அதே உலோகத்தில் தான் இந்தக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டதாகும். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் தான் பிரதமர் மோடி பயணிக்கிறார்.