பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அங்கு உள்ள யானைகளுக்கு கரும்புகள் அளித்து மகிழ்ந்தார்.
காசிரங்கா தேசிய பூங்கா:
காசிரங்கா தேசிய பூங்காவானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம்மில் உள்ளது. சுமார் 400 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயமானது, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை கொம்பு உடைய காண்டாமிருகத்திற்கு பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காண்டாமிருகங்கள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி யானை, காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரிய வகை பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன.
இது குறித்து பிரதமர் தெரிவிக்கையில், மார்ச் 9 ஆம் தேதி லக்கிமை, பிரத்யும்னன் மற்றும் பூல்மைக்கு என்ற பெயர் கொண்ட யானைகளுக்கு கரும்புகளை வழங்கினேன். காசிரங்கா காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்றது, ஆனால் பல யானைகளுடன், ஏராளமான உயிரினங்களும் இங்கு உள்ளன என தெரிவித்தார்.
திட்டங்கள் தொடங்கி வைப்பு:
இதையடுத்து அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், வடகிழக்கு மாநிலங்களுக்கு 55,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் பேம காந்து மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த கால ஆட்சியில் எல்லைப் பகுதி கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இப்பொழுது கொண்டு வரப்படும் திட்டங்கள் எல்லாம், தேர்தலை அடிப்படையாக கொண்டு, வாக்குகளை கவர்வதற்காக அல்ல. நாட்டு நலனை கருத்தில் கொண்டே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.