நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த நடிப்பு மற்றும் தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களை வசீகரிக்கும் திறன் ஆகியவற்றுக்காக அவர் நினைவுகூரப்படுவார் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் நேற்று இரவு மரணம் அடைந்தார். கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திரைப்பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400 படங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. சிறந்த குணச்சித்திர நடிகராக கொண்டாடப்படுகிறார்.
அவரின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தறங்கள். கச்சிதமான நடிப்புத் திறமையால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
ஒவ்வொரு பாத்திரத்திலும் அவரின் ஆழ்ந்த நடிப்பு, தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களை வசீகரிக்கும் திறனுக்காகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த டெல்லி கணேஷ்?
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது.
ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் டெல்லி கணேஷ் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.