இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை அஷ்டலட்சுமி என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. "வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம் மற்றும் மூங்கில். வடகிழக்கு என்றால் தேயிலை உற்பத்தி மற்றும் பெட்ரோலியம். வடகிழக்கு என்றால் விளையாட்டு மற்றும் திறன்" என பாராட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் இல்ல.. இதுதான் அஷ்டலட்சுமி!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் எழுச்சி வடகிழக்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நமது வடகிழக்கு இந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும்.

வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, அதன் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும். வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம் மற்றும் மூங்கில். வடகிழக்கு என்றால் தேயிலை உற்பத்தி மற்றும் பெட்ரோலியம்.

வடகிழக்கு என்றால் விளையாட்டு மற்றும் திறன். வடகிழக்கு என்றால் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா மையம். வடகிழக்கு என்றால் கரிம பொருட்களின் புதிய உலகம். வடகிழக்கு என்றால் மின்சக்தியின் மையம்.

பிரதமர் மோடி என்ன பேசினார்?

அதனால்தான் வடகிழக்கு நமது அஷ்டலட்சுமிகளாக திகழ்கிறது. அஷ்டலட்சுமியின் ஆசியுடன், வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் கூறுகிறது. நாங்கள் முதலீட்டிற்கு தயாராக இருக்கிறோம் என்று. நாங்கள் தலைமைத்துவத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று.

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாக வடகிழக்கு உள்ளது. அரசை பொறுத்தவரை, கிழக்கு என்ற சொல் வெறும் திசையை மட்டும் குறிக்கவில்லை.

 

எங்களை பொறுத்தவரை, கிழக்கு என்பதன் பொருள் அதிகாரம் அளித்தல். செயல்படுத்தல். வலுப்படுத்துதல் மாற்றுதல். இது கிழக்கு இந்தியாவிற்கான எங்கள் அரசாங்கத்தின் கொள்கை" என்றார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த எழுச்சி வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு, இன்றும் நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு, வடகிழக்கு பிராந்தியத்தை வாய்ப்புகளின் பகுதியாக முன்னிலைப்படுத்தி, உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.