அஸ்ஸாமில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. விமான நிலையங்கள், ஏரோ சிட்டிகள், நகர எரிவாயு விநியோகம், பரிமாற்றம், சிமென்ட் மற்றும் சாலைத் திட்டங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்ய உள்ளது அதானி குழுமம். ஏற்கனவே, 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், அதானி குழுமம் மொத்தம் 1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.
மொத்தமாக மாறும் அஸ்ஸாம்:
கவுகாத்தியில் நடைபெற்ற அட்வாண்டேஜ் அசாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025இன் போது, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "முன்னேற்றத்தின் தொலைநோக்குப் பார்வையில்தான் நாங்கள் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம்.
எனவே, அஸ்ஸாமில் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அதானி குழுமம் உறுதிபூண்டுள்ளது என்பதை நான் மிகுந்த பெருமையுடன் அறிவிக்கிறேன். குழுமத்தின் முதலீடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். அதன் பொருளாதார திறனை வலுப்படுத்தும்" என்றார்.
அதானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
பிரதமர் மோடியை பாராட்டி பேசிய அதானி, "நான், இந்த மேடையில் நிற்கும்போது, இவை அனைத்தும் 2003ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியுடன் தொடங்கியது என்பதை நான் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உங்கள் (பிரதமர் மோடி) தொலைநோக்குப் பார்வைதான் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டாக உருவெடுத்தது. ஒரு தீப்பொறியாகத் தொடங்கிய இது இப்போது ஒரு தேசிய இயக்கத்தைத் தூண்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் முதலீடு சார்ந்த பொருளாதார மாற்றங்களின் சக்தியை ஏற்றுக்கொள்ள ஊக்கமளிக்கிறது.
காமாக்யா அன்னையின் இந்தப் புனித பூமியில் நான் கால் வைக்கும் ஒவ்வொரு முறையும், அதன் இயற்கையாலும், எல்லையற்ற அழகாலும் நான் மயங்கிப் போகிறேன். பிரம்மபுத்திரா நதி தனது சொந்தப் பாதையை செதுக்கி இந்த மாநிலத்தின் நிலப்பரப்பை மறுவடிவமைத்தது போல, நமது பிரதமர் தான் நம் அனைவருக்கும் வாய்ப்புகளை மறுவடிவமைத்துள்ளார் என்று நான் சொல்ல வேண்டும்" என்றார்.
அதானி குழுமத்தின் மிகப்பெரிய முதலீட்டு உறுதிப்பாடு, அஸ்ஸாமின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க திட்டங்களுடன், அதானி குழுமம் அஸ்ஸமின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க இலக்கு வைத்துள்ளது.