இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க உள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க  உள்ளது.


பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி சர்ச்சை கருத்து:


முதல் இரண்டு கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 7ஆம் தேதி குஜராத்தில் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.


தேர்தல் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி சர்ச்சையாக பேசி வருவது தொடர்கதையாகி வருகிறது. இஸ்லாமியர்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் பேசிய கருத்துகள் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்?


ராகுல் காந்தியை இந்திய பிரதமராக பார்க்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் பாகிஸ்தான், காங்கிரஸ் கட்சி இடையேயான கூட்டணி அம்பலமாகியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர், ஆனந்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.


அப்போது, காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை மேற்கொண்ட பிரதமர், "தற்செயலாகப் பாருங்கள், காங்கிரஸ் இந்தியாவில் பலவீனமடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது.


அங்கே பாகிஸ்தான் அழுகிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தானின் ரசிகராக காங்கிரஸ் உள்ளது. பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இந்த கூட்டு இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.


நடந்தது என்ன?


காங்கிரஸ், ஏன் இவ்வளவு கொந்தளிப்புடன் இருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். இன்று காங்கிரஸ் ஒரு போலி தொழிற்சாலையாக அதாவது போலி பொருட்களின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. காங்கிரஸ் ஏன் தன்னை அன்பின் கடை என்று சொல்லிக்கொண்டு பொய்களை விற்கிறது" என்றார்.


 






ராகுல் காந்தியை புகழ்ந்து பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ராகுல் காந்தி பேசும் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, "Rahul on fire" என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டியே பிரதமர் விமர்சனம் செய்திருந்தார்.

 

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்தபோதுதான், பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் பிரிந்து தனி நாடாக உருவானது. வங்கதேச விடுதலையில் இந்திரா காந்தி மிகப்பெரிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.