கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.


மெல்ல மெல்ல நிலைமை கட்டுக்குள் கொண்டுவர, மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் அவசியமாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. ஆனால் தற்போது இந்த சான்றிதழ்களில் மத்திய அரசு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. அதாவது தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.






இந்த விவகாரத்தை பலரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இர்ஃபான் அலி என்ற நபர் எக்ஸ் வலைத்தளப் பதிவில், “தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது மாறாக வெறும் க்யு.ஆர் குறியீடு மட்டுமே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


இது விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்கு பதிலளித்தபோது, நாட்டில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக 2021 ஆம் ஆண்டு தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம் பிடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மற்ற நாடுகளில் வழங்கப்படும் சான்றிதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இல்லை என்ற வாதத்திற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், “அவர்கள் தங்கள் பிரதமர்களைப் பற்றி பெருமை கொள்ளாமல் இருக்கலாம், எங்கள் பிரதமரைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.


அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. கோவிஷீல்ட் மற்றும் வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் இந்த தடுப்பூசிகள் உலகளவில் விற்கப்பட்டன.


இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 


இச்சூழலில், கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அரிதான சந்தர்ப்பங்களில் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (TTS) ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது. 


அதாவது, ரத்தம் உறைவது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கோவிஷீல்ட் செலுத்திய மக்கள் உலகளவில் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.