41ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஒலிம்பிக் தொடரில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது.  இந்த போட்டியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்த்து இன்று விளையாடியது. போட்டி முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வென்றது. இதனால், இந்தியாவுக்கு வென்கலப் பதக்கம் பறிபோனது. கடைசி வரை போராடிய இந்திய அணி, நான்காவது இடத்தில் நிறைவு செய்தது. வெற்றியோ, தோல்வியோ இந்திய மகளிர் ஹாக்கி அணியின் போராட்ட குணத்திற்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. 


இந்நிலையில், மகளிர் ஹாக்கி அணியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அவர்களுக்கு அறுதல் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அணி வீராங்கனைகளுடன் உரையாடும் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

















 

ஹாக்கி வீராங்கனைகளிடம் பேசிய பிரதமர் மோடி, “இத்தனை ஆண்டுக்கால எதிர்பார்ப்பை, கனவை நீங்கள் சுமந்து சென்று இப்போது இந்த நிலையை எட்டி இருக்கிறீர்கள். உங்களது சாதனையை நினைத்து நாடும், நாட்டு மக்களும் பெருமைப்படுகின்றனர். நீங்கள் அழுவது எனக்கு கேட்கிறது, நீங்கள் அழக்கூடாது. ஒலிம்பிக் தொடரில் நீங்கள் இந்த நிலையை எட்ட உதவிய பயிற்சியாளருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்து வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.