இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவத் தளத்தில்140 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அந்த  140 தீவிரவாதிகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (LoC) போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஊடுருவத் தயார் நிலையில்காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003-ம்ஆண்டில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகுபல்வேறு கால கட்டங்களில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் ஒப்பந்தம், உடன்பாடுகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது.


கடந்த 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக அதே ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதனால் எல்லையில் போர் பதற்றம் உருவானது.


இந்நிலையில், கடந்த பிப்ரவரி (2021) இறுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி சண்டை நிறுத்தம் தொடர்பாக இதுவரை மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் உறுதியுடன் கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. 
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் 140 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.





இது குறித்து இந்திய ராணுவத் தரப்பில், "பாகிஸ்தானின் ஏவுதளத்தில் இந்திய எல்லைக்குள் எந்நேரமும் ஊடுருவ ஆயத்தநிலையில் 140 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக அவர்கள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி அனைத்தையும் வீரர்கள் சாமர்த்தியமாக முறியடித்தனர். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ள நிலையில் பாகிஸ்தானோ எல்லையை ஒட்டி கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை அத்தகைய கட்டுமானங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். ஆனால், அவர்களோ அதற்குப் பதிலடியாக இந்திய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து சேதத்தை விளைவித்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதன் பின்னர், காஷ்மீர் மண்ணிலிருந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பயந்தோடிவிட்டனர்.


உள்ளூர்வாசிகளை மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளை மாற்றுவதைத் தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு ஆளாக வாய்ப்புள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிலைமையை புரியவைத்து சீர்படுத்துகிறோம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதுவரை நிறைய பேரை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள இச்செய்தி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.