ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும்ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளார். குஜராத் மாநிலம் கச்சில் ராணுவ உடை அணிந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடியுள்ளார் பிரதமர் மோடி.


ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்:


கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி தீபாவளியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். 2014இல் சியாச்சினிலும், 2015இல் பஞ்சாப் எல்லையிலும், 2016இல் இமாச்சலப் பிரதேசத்தின் சும்டோவிலும், 2017இல் ஜம்மு-காஷ்மீரின் குரேஸ் செக்டாரிலும், 2018இல் உத்தரகாண்டின் ஹர்சில் பகுதியிலும் தீபாவளி கொண்டாடினார்.


கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் ரஜோரியிலும் 2020ஆம் ஆண்டு, ராஜஸ்தானின் லாங்கேவாலாவிலும் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். கடந்த 2021ஆம் ஆண்டு, காஷ்மீரின் நவ்ஷேராவிலும் 2022ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் கார்கிலிலும், கடந்தாண்டு இமாச்சலத்தின் லெப்சாவிலும் தீபாவளி கொண்டாடினார்.


 






கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், சியாச்சின் சென்ற பிரதமர் மோடி, "எல்லையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் நிற்பதால்தான் 125 கோடி இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி தங்கள் வாழ்க்கையை நடத்த முடிகிறது" என்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் கூறினார். வீட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரின் பிரதிநிதியாக தீபாவளியை கொண்டாடுவதாக கூறியிருந்தார்.


முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் இன்று கலந்து கொண்டார். சர்தார் படேலின் பிரமாண்ட சிலையான ஒற்றுமை சிலை அமைந்துள்ள குஜராத்தின் கெவாடியாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.