டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பி நிகழ்ந்த சம்பவத்தில், பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, டெல்லி காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து கோணங்களிலும் விசாரணை முடிக்கிவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன்.“ என கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பதிவு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் கவலையளிக்கிறது. மிகுந்த துயரத்தின் இந்த தருணத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.“ என்று தெரிவித்துள்ளார்.

அவரச கூட்டத்தை கூட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக வெளியிட்ட பதிவில், "இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன.

சிலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. NSG மற்றும் NIA குழுக்கள், FSL உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன்.

டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். அனைத்து கோணங்களிலும் உடனடியாக விசாரிக்கப்படும். முடிவுகளை பொதுமக்களுக்கு வழங்குவோம். நான் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்வேன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வேன்." என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவரச கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார் அமித் ஷா. அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. முக்கிய நகரங்களில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.