தலைநகர் டெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Continues below advertisement

உஷார் நிலையில் தலைநகர் டெல்லி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் 1-ன் அருகே நின்றிருந்த கார் வெடித்துச் சிதறிது. இன்று மாலை சுமார் 6.55 மணி அளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்த நிலையில், காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கார் வெடித்த இடத்திற்கு அருகே இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 8 வாகனங்களிலும் தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடித்துச் சிதறிய காருக்கு அருகே நின்றிருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு

இந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கார் வெடித்துச் சிதறிய இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 3 முறை வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக காவல்துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் வெடி விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உஷார் நிலை

டெல்லியில் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தையடுத்து, மும்பையும் உஷார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டு, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலும் கண்காணிப்பு

டெல்லி கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.