பிரதமர் நரேந்திர மோடி, வரும் 31-ம் தேதி, சீனாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 2019-ம் ஆண்டிற்குப்பின் அங்கு செல்லும் பிரதமர், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான், சீனா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி, ஆகஸ்ட் 30-ம் தேதி, ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா உடன் இணைந்து, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

அதன் பிறகு, ஆகஸ்ட் 31-ம் தேதி அவர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, வரும் 31  மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதற்காக, 31-ம் தேதி சீனாவின் டியான்ஜின் நகருக்கு செல்லும் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

“கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக சீனா செல்லும் பிரதமர்“

2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குப்பின், ராணுவ தளபதிகள் அளவிலான உயர்மட்ட கூட்டம் நடத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்னை சரி செய்யப்பட்டது.

அதன் பின், எல்லைப் பகுதிகயில் இருந்து படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டன. இச்சம்பவத்திற்குப்பின், முதன் முறையாக பிரதமர் மோடி சீனா செல்வது குறிப்பிடத்தக்கது.

“ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெடுத்திட மறுத்த ராஜ்நாத்“

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில், குயிங்டாவோ நகரத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், இந்தியாவின் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியான நிலையில், சீனா, பாகிஸ்தான் நாடுகளை தவிர்ப்பதற்காக அச்சம்பவத்தை குறிப்பிடாமல், பாகிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலை மட்டும் சேர்க்க முயன்றுள்ளனர்.

அதனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்நிலையில், கூட்ட முடிவில், அந்த கூட்டறிக்கை வெளியிடப்படாது என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், தற்போது பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.