நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரின் கோடக் மஹிந்திரா வங்கி சேமிப்புக் கணக்கில், 1 செப்டில்லியன் டிரில்லியன் அல்லது 1 அன்டெசிலியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். கேள்விக்குரிய அந்த மொத்தத் தொகை 37 இலக்கங்களில் இருந்துள்ளது. அதாவது, ரூ.10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 என்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று ட்வீட் செய்த பத்திரிகையாளர் ஒருவர், 20 வயதான தீபர் என்பவருக்குத் தான் இந்த தொகை வரவு வைக்கப்பட்டதாகவும், அது ஒரு பில்லியன் லட்சம் 56 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், என்னுடைய கணக்கிடும் திறன் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. மற்றவர்கள் இதை பெருக்கலோ, வகுத்தலோ செய்து கொள்ளுங்கள். தற்போது, வருமான வரித்துறை இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வங்கிக் கணக்கும் முடக்கப்ட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
அந்த வங்கிக் கணக்கு யாருடையது.?
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்த இளைஞர் பயன்படுத்திவந்தது அவருடைய தாய் காயத்திரி தேவியின் வங்கிக் கணக்கு என தெரியவந்துள்ளது. அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் காலமாகியுள்ளார்.
இந்நிலையில், கடநத் ஆகஸ்ட் 3-ம் தேதி, அந்த வங்கிக் கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி(ரூ.1,13,56,000 கோடி) வரவு வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் தீபக்கிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த குறுந்தகவலை தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து, அதில் உள்ள பூஜ்ஜியங்களை எண்ணுமாறு அவர் கூறியுள்ளார்.
வங்கிக்கு சென்ற இளைஞருக்கு ஏமாற்றம்
மேலும், அடுத்த நாள் காலையில், அந்த வரவு குறித்து தெரிந்துகொள்ள வங்கிக்கு சென்றுள்ளார் தீபக். அப்போது, அந்த பிரமாண்டமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதை வங்கியும் உறுதி செய்தது. ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில் வரவு வைக்கப்பட்டதால், அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் விசாரணை நடத்துவதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, இது குறித்த தகவல்கள் பரவி வைரலானதையடுத்து, அந்த இளைஞருக்கு உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமிருந்தும் அழைப்புகளும், விசாரிப்புகளும் வந்துள்ளது. அதை சமாளிக்க முடியாமல் அவர் தனது செல்போனை சுட்ச் ஆஃப் செய்துள்ளார்.
கோடக் மஹிந்திரா வங்கியின் அறிக்கை கூறுவது என்ன.?
இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோடக் மஹிந்திரா வங்கி, இளைஞரின் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரும் தொகை வரவு வைக்கப்பட்டதாக ஊடகங்களில் வரும் தகவல்கள் தவறு என தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தின் விளைவால், தங்கள் வாடிக்கையாளர்கள், அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை, மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது நெட் பேங்க்கிங் மூலமாகவோ சரிபார்க்குமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கோடக் மஹிந்திரா வங்கியின் அமைப்புகள் சரியாக செயல்படுவதாக வங்கி உறுதி செய்துள்ளது. அனைத்து சேவைகளும் பாதுகாப்புடனும், முழுவதும செயல்படும் விதமாகவும் இருப்பதாக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக, வங்கியின் தவறால் இப்படி பெருந்தொகை தவறுதலாக வந்திருக்கலாம், கம்ப்யூட்டர் தவறினால் நடந்திருக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த நிலையில், வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டது.