எல்லை பிரச்னை காரணமாக இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்க இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.


பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு:


இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். உச்ச மாநாடுக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, கிழக்கு லடாக்கில் கல்வான அருகே கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவி வரும் பதற்றமான சூழலை தணிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்பு கொண்டுள்ளனர்.


செய்தியாளர்களை இன்று சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா, இதுகுறித்து கூறுகையில், "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர். மற்ற பிரிக்ஸ் தலைவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.


நடந்தது என்ன? 


அதிபர் ஷி ஜின்பிங்குடனான உரையாடலின்போது, எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் இந்தியா-சீனா எல்லையிலும் உள்ள பிற பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து இந்தியாவின் கவலைகளை பிரதமர் எடுத்துரைத்தார். எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதும், இந்திய-சீனா உறவை இயல்பாக்குவதற்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதிப்பதும் அவசியம் என்று பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.


இது தொடர்பாக, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு இரு நாட்டு தலைவர்களும் உத்தரவிட்டுள்ளனர்" என்றார்.


கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அத்துமீறலின் உச்சக்கட்டமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால், 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு கூறி வருகிறது.


முடிவுக்கு வருகிறதா இந்திய, சீன எல்லை பிரச்னை?


இந்த விவகாரத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 13, 14 தேதிகளில், இரு நாடுகளுக்கிடையே ராணுவ தளபதிகள் மட்டத்தில் 19ஆவது கட்ட பேச்சுவார்த்தை, இந்திய எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோவில் நடைபெற்றது.


பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "மேற்கு செக்டாரில் இந்திய சீன எல்லை (உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு) பகுதியில் மீதமுள்ள சச்சரவுகளை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் நேர்மறையான, ஆக்கபூர்வமான, ஆழமான பேச்சுவார்த்தை மேற்கொண்டன. 


தலைமையின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படையான, முன்னோக்கி எடுத்து செல்லும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். மீதமுள்ள பிரச்னைகளை விரைவாக தீர்க்கவும், ராணுவ மற்றும் தூதரக வழியாக பேச்சுவார்த்தையை விரைவாக முன்னேடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம்" என குறிப்பிட்டது.