கோயில்களை போன்று சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களையும், தமிழ்நாடு அரசு கையகப்படுத்துமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரதமர் மோடி பேச்சு:


விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நிஜாமாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்ததோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.


காங்கிரஸ் பேசும் ”புதிய மொழி”


பிரதமர் மோடி பேசுகையில், “ பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், ஏழைகள் தான் நாட்டின் மிகப்பெரிய சாதி.  அவர்களை மேம்படுத்த தன்னுடன் இணைய அனைத்து தரப்பினரையும் கைகூப்பி வேண்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை இது தான் இது எனது கனவு, எனது வாக்குறுதி, எனது முயற்சி மற்றும் தவம்.


மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்ற புதிய மொழியை காங்கிரஸ் பேச தொடங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்கான பேச்சை எழுதிக்கொடுத்த நபர்கள் அந்த முழக்கம் தென்னிந்தியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பெரும் அநீதியை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் உணரவில்லை. 


100 மக்களவை தொகுதிகள் பறிபோகும்?


மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன, ஆனால் மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அதன்படி, தொகுதி மறுவரையறை செய்தால் தென்னிந்தியா 100 மக்களவை தொகுதிகளை இழக்கும். தென்னிந்தியா இதை ஏற்குமா? தென்னிந்தியா காங்கிரசை மன்னிக்குமா?


சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் கையகப்படுத்தப்படுமா?


சிறுபான்மை மத நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிதி மீதான அரசின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் . தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவினங்களுக்காகப் பயன்படுத்துகிறது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை அவர்கள் தொடுவதில்லை.  கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.


காங்கிரசின் புதிய முழக்கத்தின்படி மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமானால்,  சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவற்றின் நிதியை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அல்லது இந்து மத வழிபாட்டு தலங்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் காங்கிரஸ் குரல் எழுப்புமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும், பாஜக ஆட்சியின் சாதனை தொடர்பாகவும் பிரதமர் மோடி விரிவாக பேச்னார்.