தென்மாநிலங்களை குறிவைத்து வேலை செய்து வரும் பாஜக, தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால், இதுவரை அது பலன் அளித்ததாக தெரியவில்லை. வரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் சந்திக்கும் இழப்புகளை தென்மாநிலங்களில் ஈட்டும் வெற்றியின் மூலம் சரி கட்ட முயற்சித்து வருகிறது.


பாஜக கூட்டணியில் இணைய விரும்பினாரா கே.சி.ஆர்?


இந்தாண்டின் இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நிஜாமாபாத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தேசிய அரசியிலில் புயலை கிளப்பியுள்ளது.


பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை சுமத்திய ஒரு மணி நேரத்திலேயே தெலங்கானா அமைச்சரும் சந்திரசேகர் ராவின் மகனுமான ராமா ராவ் பதிலடி அளித்துள்ளார்.


எங்களை என்ன வெறிநாய் கடித்து விட்டதா?


பாஜக கூட்டணியில் இணைவதற்கு நாங்கள் ஒன்றும் பைத்தியம் அல்ல என அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த பிரதமர் மிகவும் முரண்பாடானவர். ஒருபுறம், கர்நாடகாவில் காங்கிரஸுக்கு பிஆர்எஸ் நிதியளித்ததாகக் கூறுகிறார். மற்றொரு புறம், அவர் எங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் (பாஜக கூட்டணி) அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார். 


தேசிய ஜனநாயக கூட்டணி போய் சேர்வற்கு எங்களை என்ன வெறிநாய் கடித்து விட்டதா? உங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் விலகுகின்றன. உங்களை விட்டு சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், தெலங்கு தேசம், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் வெளியேறியுள்ளன.


உங்களுடன் யார் இருக்கிறார்கள்? மத்திய புலனாய்வு துறை (சிபிஐ), அமலாக்கத்துறை (ED) மற்றும் வருமான வரித் துறையைத் தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உங்களுடன் யார் இருக்கிறார்கள்?" என்றார்.


தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து பேசினார்.


ஆனால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சிகளை அவர் பெரிதாக முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: பஞ்சாப் பொற்கோயிலுக்கு பசியோடு வந்த பக்தர்கள்.. தட்டுக்களை கழுவி உணவை பரிமாறிய ராகுல் காந்தி