கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்துள்ளார். இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்திற்கு இன்று காலை 11:15 மணிக்கு வந்திறங்கிய பிரதமர், அங்கிருந்து சூரல்மலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.


களத்தில் இறங்கிய பிரதமர் மோடி: மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி உடன் சென்றனர்.


 






வான்வழியாக ஆய்வு செய்த பிறகு, கல்பெட்டாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே மேல்நிலைப் பள்ளியில் தரையிறங்கிய அவர், அங்கிருந்து சாலை வழியாக நிலச்சரிவு ஏற்பட்ட சில பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


மத்திய அரசிடம் கேரள அரசு கோரியுள்ள தொகை: இந்த நிலச்சரிவு சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் 2,000 கோடி ரூபாயை கேரள அரசு கோரியுள்ளது.


முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில்தான், மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


சம்பவம் நடந்து 2 வாரம் நிறைவு பெற உள்ள நிலையில், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துயரம் நிறைந்த கதைகள் வெளியாகி வருகின்றன.