Cabinet approves Projects: புதியதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


8 ரயில்வே திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்:


டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதியதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2031 நிதியாண்டு வரையிலான இதுதொடர்பான பணிகளுக்கு, 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இணைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்தவும், ஏழு மாநிலங்களின் 14 மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், எண்ணெய் இறக்குமதி மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கவும் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு ரயில்வே திட்டங்களும், இணைக்கப்படாத பகுதிகளை இணைப்பதன் மூலமும், போக்குவரத்து நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதன் மூலமும், தளவாட செயல்திறனை மேம்படுத்தும், இதன் விளைவாக விநியோகச் சங்கிலிகள் நெறிப்படுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம்:


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்னவ், “ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களை புதிய ரயில்வே திட்டங்கள் உள்ளடக்கும். மேலும் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க்கை 900 கிமீ அதிகரிக்கும். நடைமுறையில், இது மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோலில் இருந்து தெலுங்கானாவில் வாரங்கல் வரை ஒரு முழுமையான நடைபாதையை உருவாக்கும். "விவசாய பொருட்கள், உரம், நிலக்கரி, இரும்பு தாது, எஃகு, சிமென்ட், பாக்சைட், சுண்ணாம்பு, அலுமினிய தூள், கிரானைட், பேலஸ்ட், கொள்கலன்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்துக்கு இவை அத்தியாவசியமான வழிகள். திறன் அதிகரிப்பு பணிகள் கூடுதல் சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.  இந்தத் திட்டங்களின் மூலம் 64 புதிய நிலையங்கள் கட்டப்படும்.  கிழக்கு சிங்பம், பத்ராத்ரி கோத்தகுடெம், மல்கங்கிரி, கலஹண்டி, நபரங்பூர் மற்றும் ராயகடா ஆகிய மாவட்டங்களுக்கு இணைப்பை மேம்படுத்தப்படும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.


2 கோடி வீடுகள் - ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு:


கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்படும் விடுகளால் 1 கோடி தனிநபர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமவெளிப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 1.2 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில்  கட்டப்படும் வீடுகளுக்கு ரூ.1.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY-U) 2.0 க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இதன் கீழ் 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்ட, வாங்க அல்லது வாடகைக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. மேலும், ரூ.1,765.67 கோடி முதலீட்டில் தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மையான தாவரத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.