இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் 'அஹ்லன் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்து கொண்டார்.
"அனைவரின் இதயத்துடிப்பும் ஒன்றைதான் சொல்கிறது"
ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " அபுதாபியில் புதிய சரித்திரம் படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், அனைவரின் இதயமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று மைதானத்தில், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க என ஒவ்வொரு இதயத்துடிப்பும், ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு குரலும் சொல்கிறது. எனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வந்துள்ளேன். நீங்கள் பிறந்த மண்ணின் நறுமணத்தைக் கொண்டு வந்துள்ளேன். 140 கோடி மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். உங்களால் பாரதம் பெருமை கொள்கிறது என்பதே அந்த செய்தி.
2015ஆம் ஆண்டில் நான் மத்தியில் ஆட்சிக்கு வந்து கொஞ்ச காலமே ஆனது. அப்போது, முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும்.
"என்னால் மறக்கவே முடியாது"
ராஜாங்க ரீதியான உறவு எனக்குப் புதிது. அப்போது, விமான நிலையத்தில் அன்றைய பட்டத்து இளவரசரும் இன்றைய அதிபரும், அவரது சகோதரர்கள் ஐந்து பேரும் என்னை வரவேற்றனர். அந்த அரவணைப்பு, அவர்களின் கண்களில் தெரிந்த பிரகாசம் அதை என்னால் மறக்கவே முடியாது. அந்த வரவேற்பு எனக்கு மட்டுமல்ல. 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்தது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வது இது 7ஆவது முறை. சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அவர்களும் இன்று என்னை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக வந்தார். இது அவரைச் சிறப்புறச் செய்கிறது. இந்தியாவில் நான்கு முறை அவரை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு அவர் குஜராத்துக்கு வந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சிவிலியன் விருதான தி ஆர்டர் ஆஃப் சயீதை வழங்கியது எனது அதிர்ஷ்டம். இந்த கௌரவம் என்னுடையது மட்டுமல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் உரியது.
"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இந்தியனின் குறிக்கோள்"
கடந்த 2015 ஆம் ஆண்டு, உங்கள் அனைவரின் சார்பாக அபுதாபியில் கோயில் கட்டும் திட்டத்தை அவரிடம் (ஷேக் முகமது பின் சயீத்) முன்வைத்தபோது, அவர் உடனடியாக அதற்கு ஆம் என்றார். இப்போது இந்த பிரம்மாண்டமான (BAPS) திறப்பு விழாவிற்கான நேரம் வந்துவிட்டது.
இன்று, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகம் ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. எளிதாக வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் இரு நாடுகளும் நிறைய ஒத்துழைக்கின்றன. இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்கின்றன.
நாங்கள் எங்கள் நிதி அமைப்பை ஒருங்கிணைக்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சமூகம் மற்றும் கலாச்சாரத்தில், இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதித்தது உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளும்" என்றார்.