குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. குவாட் அமைப்பின் தலைவர்கள் நேரடி யாக கலந்து கொள்ளும் 2-வது உச்சி மாநாடு இதுவாகும்.இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு, கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநாடு காணொலிகாட்சி வாயிலாக நடத்தப்பட்டது. 2-வது உச்சி மாநாடு, கடந்த செட்பம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. 3வது மாநாடு இந்த ஆண்டு மார்ச்சில் காணொலிகாட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில், 4வது மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் மற்றும் ஜப்பானில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, டோக்கியோ வந்துவிட்டேன். இந்த பயணத்தின்போது குவாட் நாடுகளின் தலைவர்கள், சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஆலோசகர், சாஃப்ட் பேங்க் க்ரூப் கார்பரேஷனின் நிர்வாகக் குழு உறுப்பினர், என்.ஈ.சி கார்ப்பரஷேனின் சேர்மன் உள்ளிட்ட ஜப்பான் தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோஇ அல்பனீஸ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
டோக்கியோ சென்றடைந்த பிரதமரை வரவேற்க இந்திய வம்சாவளியினர், அவர் தங்கும் விடுதியின் வாயிலில் கூடியிருந்தனர் . அப்போது, பிரதமரை வரவேற்க ஜப்பானிய சிறுவன் மற்றும் சிறுமியும் காத்திருந்தனர். அவர்கள் இந்தியில் பிரதமரை வரவேற்க, ஆச்சரியப்பட்ட பிரதமர் மோடி, நீ எங்கிருந்து இந்தியைக் கற்றுக்கொண்டாய்? உனக்கு இந்தி நன்றாகத் தெரியுமா? என்று கேட்டார். பின்னர் அவர்களுக்கு தனது ஆட்டோகிராபை போட்டுக்கொடுத்தார்.