டெல்லியில் ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு
20 நாடுகள் அங்கம் வகிக்கும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இதனால் அந்த அமைப்பில் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி20 கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த் அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இப்படியான நிலையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேசமயம் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம் என்பதால், அதற்காக முன்கூட்டியே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி
சில தினங்களுக்கு தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி அந்த பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி20 உச்சிமாநாடு குறித்து பேசினார். அப்போது, “ஒட்டுமொத்த நாடும் ஜி20 உச்சிமாநாட்டை நடத்த உள்ள நிலையில், இதனை வெற்றியடைய செய்வதில் டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. விருந்தினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகின்றனர்.
நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசியக்கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என தெரிவித்தார்.