ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இன்னும் மூன்றே மாதங்களில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசியலில் சமீபத்தில் பூகம்பம் வெடித்தது. ஏற்கனவே, உட்கட்சி பூசலால் ராஜஸ்தான் காங்கிரஸ் தவித்து வரும் நிலையில், இந்த பிரச்னை அக்கட்சிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியது. இதற்கிடையே, இதை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


புயலை கிளப்பிய 'ரெட் டைரி':


மணிப்பூர் பழங்குடி பெண்கள் வீடியோ விவகாரம் குறித்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சமீபத்தில் விவாதம் நடந்தது. அப்போது, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களுடன் மணிப்பூர் விவகாரத்தை ஒப்பிட்டு பேசி, ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்தார் அமைச்சர் ராஜேந்திர சிங் குட்டா. இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


இச்சூழலில், ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு சிவப்பு வண்ணத்தில் டைரி ஒன்றை கொண்டு வந்த குட்டா, முதலமைச்சர் அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் பல அதிர்ச்சி தகவல்கள் அதில் இருப்பதாக முழக்கங்களை எழுப்பினார். சட்டப்பேரவையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அவையில் இருந்து பாதுகாவலர்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.


இந்த சம்பவம் ராஜஸ்தான் அரசியலை உலுக்கி வரும் நிலையில், இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. கங்காபூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ரெட் டைரி விவகாரத்தை முன்வைத்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


"சிவப்பு நிறத்தை கண்டு அஞ்சும் முதலமைச்சர்"


பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாய பட்ஜெட்டை 6 மடங்கு உயர்த்தி கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்ததாகவும் அதேசமயம் விவசாயிகளுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சிலரை அனுப்பி முழக்கமிடுவதால் நீங்கள் எதையும் சாதிக்க மாட்டீர்கள் என்று கெலாட்டிம் நான் சொல்ல விரும்புகிறேன். அவமானமாக இருந்தால், ரெட் டைரி விவகாரத்தில் ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். இப்போதெல்லாம், சிவப்பு நிறத்தை கண்டு கெலாட் மிகவும் பயப்படுகிறார். 


டைரியின் நிறம் சிவப்பு. ஆனால், கருப்பு (சட்டவிரோத) செயல்கள் அதில் மறைக்கப்பட்டுள்ளன. சிவப்பு டைரியில் பல கோடி ஊழல் விவரங்கள் அடங்கியிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​விவசாய பட்ஜெட் 22,000 கோடி ரூபாயாக இருந்தது. நரேந்திர மோடி அரசாங்கம் ஒன்பது ஆண்டுகளில் 6 மடங்கு உயர்த்தி 1,25,000 கோடி ரூபாயாக மாற்றியது" என்றார்.