மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு தங்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த நாளை மேலும் சிறப்பாகும் வகையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்த அறிவிப்பை எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், சிலிண்டர் விலை குறைப்பால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறையும். சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நலமான வாழ்க்கையையும், ஆரோக்கியமான சூழலையும் உறுதி செய்ய முடியும். மேலும் இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்கள் எளிதான வாழ்க்கை வாழ்வதை உறுதிசெய்வது போன்ற பாஜகவின் கொள்கைக்கு ஏற்ப உள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார். 


தற்போதைய சூழலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது ரூ.918.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பால் ரூ.818.50 ஆக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இந்த விலை குறைப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் தேர்தலை மனதில் வைத்து பாஜக நூதனமான விலை குறைப்பை அமல்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. 


முன்னதாக நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க திட்டம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Womens Day : மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்.. மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?